மாணவி கீர்த்தனாவை, மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
- மேல்நிலைக்கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
- அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன்.
இவரது மனைவி சித்ராதேவி. இவர்களது மகள் கீர்த்தனா.
இவர் நடுநிலைக்கல்வியை தளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார். பின்னர் மேல்நிலை கல்வியை உள்ளிக்கோட்டை அரசு பள்ளியில் படித்தார்.
இதையடுத்து மருத்துவராகி சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீட் தேர்வு எழுதினார்.
அந்த தேர்விலும் வெற்றி பெற்ற கீர்த்தனாவுக்கு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்க இடம் கிடைத்தது.
அரசு பள்ளியில் படித்து அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்த கீர்த்தனாவை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் தளிக்கோட்டை அரசு பள்ளி சார்பில் சாதனை படைத்த மாணவி கீர்த்தனாவை கவுரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தளிக்கோட்டையில் பாராட்டு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் தலைமை தாங்கினார்.
தளிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.சரவணன் முன்னிலை வகித்தார். தளிக்கோட்டை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். சூரியபிரபா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு மாணவி கீர்த்தனாவுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இதில் மாணவியின் பெற்றோர் இளவரசன், சித்ராதேவி மற்றும் வட்டார கல்வி அலுவலர் சம்பத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே. சுந்தரமூர்த்தி, எஸ். மாசிலாமணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் எம்.விஜயகுமார், எஸ்.பி.ஏ. மெட்ரிக் பள்ளி தாளாளர் பி.ரமேஷ், கிராம பிரமுகர் ஞானம், ஆசிரியர் சவுந்தர்ராஜன் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் சசிக்குமார் நன்றி கூறினார்.