உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதியை மீறி அபராதம் கட்டாதவர்கள் உஷாராக இருங்கள் - கமிஷனர் அதிரடி உத்தரவு

Published On 2023-02-03 08:54 GMT   |   Update On 2023-02-03 08:54 GMT
  • அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.
  • அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

சென்னை:

சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

இப்படி விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

வேகமாக வாகனங்களை இயக்கியவர்கள் சிக்னலை மீறி சென்றவர்கள், ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் என பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இது போன்று அபராதம் விதிக்கும்போது வாகன ஓட்டிகளிடம் போலீசார் பணமாக அபராத தொகையை வாங்குவதில்லை. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள். பே.டி.எம் கியூ. ஆர்.கோடு மூலமாகவும் ஏ.டி.எம். கார்டு மூலமாகவும் அபராத தொகையை வசூலித்து வருகிறார்கள். விதி மீறலில் ஈடுபடும் நபர்களிடம் பணம் இல்லையென்றால் போலீசார் அபராத ரசீதை கையில் கொடுத்து ஆன்லைனில் பணத்தை செலுத்திவிடுமாறு கூறி விடுவார்கள்.

இந்த அபராத தொகையை ஆன்லைனில் செலுத்தாமல் பலரும் காலம் தாழ்த்திக்கொண்டே வருவது வழக்கம். பலர் அபராதம் விதிக்கப்பட்டதையே மறந்து போய் இருப்பார்கள். இது போன்ற நபர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிப்பதில் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விதி மீறலில் ஈடுபடுபவர்களின் அபராத ரசீதை வாங்கி வைத்துக்கொண்டு அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பவர்களை சாலையில் மடக்கி பிடித்து அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.

போக்குவரத்து இணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில் அனைத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் அபராத வசூல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை நேற்று முதல் தொடங்கி உள்ளது. இனி சாலைகளில் நின்று விதிமீறல் வாகனங்களை பிடிக்கும் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் நம்பரை வைத்து குறிப்பிட்ட வாகனம் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் இருந்தால் உடனடியாக அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களை தேர்வு செய்து முகாம் அமைத்து அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை நேற்று தொடங்கியது.

இதன்படி அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சிறப்பாக பணி புரிந்து அதிக அபராத தொகையை வசூலிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக அபராத தொகையை வசூலிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இவர்களை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். இப்படி போக்குவரத்து போலீசார் அபராத வசூல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

உங்கள் வாகனம் எங்கேயாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு உள்ளதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து அதற்கான அபராத தொகையை கட்டி விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் வெளியில் செல்லும்போது போக்குவரத்து போலீசாரிடம் நிச்சயம் மாட்டிக்கொள்வீர்கள். அப்போது இத்தனை நாட்களாக ஏன் அபராத தொகையை கட்டவில்லை என்று போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே உஷாராக இருங்கள்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை போக்குவரத்து இணை கமிஷனர் மயில்வாகனன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பேரியில் அவர் ஆய்வு செய்த போது உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News