வெளிநாட்டு ஆன்மிக பயணம் அழைத்து செல்வதாக கோவையை சேர்ந்த 66 பேரிடம் ரூ.36 லட்சம் மோசடி
- நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை.
கோவை:
கோவை தெற்கு உக்கடம் அமீன் காலனி 3-வது வீதியை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மனைவி அமீதா(வயது62).
இவர் கோவை பெரிய கடைவீதி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சென்னை புரசைவாக்கம், பெருமாள்பேட்டை பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபரான ஜாபர் அலி என்பவர் அறிமுகம் ஆனார்.
இவர் வெளிநாட்டிற்கு ஆன்மிக பயணம் அழைத்து சென்று வரும் பணி செய்து வருவதாக என்னிடம் தெரிவித்தார்.
மேலும் ஆன்மிக பயணம் செல்வதற்கான ஏற்பாடுகளை நான் செய்து வருகிறேன். யாராவது அங்கு செல்ல விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள். நான் அவர்களை அழைத்து செல்கிறேன் என தெரிவித்தார்.
இதனை நம்பி நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் தெரிவித்தேன். அத்துடன் 66 பேர் பயணம் செல்ல விரும்புவதாக கூறி என்னிடம் ரூ.36 லட்சத்து 51 ஆயிரம் பணத்தை கொடுத்தனர். நானும் அந்த பணத்தை வாங்கி ஜாபர் அலியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தேன்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் ஜாபர் அலி ஆன்மிக பயணத்துக்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. இதனால் என்னிடம் பணம் கொடுத்தவர்கள், பயணம் என்ன ஆனது என கேள்வி கேட்க ஆரம்பித்தனர். மேலும் எங்களது பணத்தையும் திரும்ப பெற்று தருமாறு தெரிவித்தனர்.
இதையடுத்து நான், ஜாபர் அலியிடம் இதுகுறித்து கேட்டபோது அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
நான் பணத்தை திருப்பி தருமாறு கேட்டேன். ஆனால் பணத்தையும் தர மறுத்து அவர் ஏமாற்றி விட்டார். எனவே வெளிநாட்டு ஆன்மிக பயணம் அழைத்து செல்வதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட ஜாபர் அலி மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
அவரது புகாரின் பேரில் போலீசார் சென்னையைச் சேர்ந்த ஜாபர்அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.