தமிழ்நாடு

படப்பையில் 9-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2025-01-03 08:54 GMT   |   Update On 2025-01-03 08:54 GMT
  • படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
  • வண்டலூர்-வாலாஜாபாத் சாலை படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

சென்னை:

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வண்டலூர்-வாலாஜாபாத் சாலை படப்பையில் ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சமீபத்தில் ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத; கடுமையாக அதிகரித்துள்ள விலைவாசி உயர்வு, கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்தும்; குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இடங்களில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்காத, குடிநீர் வசதிகளை முழுமையாக ஏற்படுத்தாத குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தைக் கண்டித்தும், அ.தி.மு.க. காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், படப்பையில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம், குன்றத்தூர் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளரும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான மதனந்தபுரம் பழனி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கழக பிரதிநிதிகள், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News