தமிழ்நாடு

ஜமைக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட வாலிபர் - பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் அடுத்த வாரம் நெல்லை வரும் உடல்

Published On 2025-01-03 09:02 GMT   |   Update On 2025-01-03 09:06 GMT
  • கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
  • விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை.

நெல்லை:

ஜமைக்கா நாட்டில் தென்காசி மாவட்டம் சுரண்டையை சேர்ந்த சுபாஷ் அமிர்தராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். இந்த சூப்பர் மார்க்கெட்டில் நெல்லை சந்திப்பு மீனாட்சி புரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் விக்னேஷ் (வயது 31) என்பவர் ஓராண்டுக்கு மேலாக சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் அந்நாட்டில் கடந்த மாதம் 18-ந்தேதி அதிகாலையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்து கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் விக்னேஷ் மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் வேலை பார்த்த மேலும் 2 பேர் காயமடைந்தனர். இதையறிந்த அவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

விக்னேஷின் உறவினர்கள் அவரது உடலை விரைந்து இந்தியா அனுப்ப அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தச்சை பகுதி தி.மு.க. செயலாளர் தச்சை சுப்பிரமணியன் தலைமையில் மனு அளித்தனர். எம்.பி ராபர்ட் புரூஸ் விக்னேஷின் உடல் விரைவில் தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் உயிரிழந்து 15 நாட்களுக்கு மேல் ஆகியும் அவரது உடல் தாயகம் கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் கடும் சோகத்தில் உள்ளனர்.

இதுகுறித்த விக்னேஷின் உறவினர்கள் கூறுகையில், விக்னேஷின் உடலுக்கு நேற்று தான் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதாக அந்நாட்டில் இருந்து எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து விக்னேஷின் உடல் விமானம் மூலம் தாயகம் கொண்டு வர ரூ.16 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்துள்ளார்கள். அதுதொடர்பாக பேசி வருகிறோம். அடுத்த வாரத்தில் விக்னேஷின் உடல் நெல்லைக்கு கொண்டு வரப்படும் என நம்புகிறோம் என்றனர்.

Tags:    

Similar News