சினிமா செய்திகள்

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம்

திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை குறிப்பிடுவது கட்டாயம்- தயாரிப்பாளர்களுக்கு சி.பி.எஃப்.சி. அறிவுறுத்தல்

Published On 2022-10-11 17:59 GMT   |   Update On 2022-10-11 18:24 GMT
  • தவறினால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
  • அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியம் (சி.பி.எஃப்.சி) அனைத்து வகையான திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கி வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் திரைப்படங்களுக்கு வயது வந்தோருக்கு மட்டும் (ஏ சர்டிபிகேட்) வழங்கப்படுகிறது.

18 வயதுக்கு உட்பட்டவர்கள் பெற்றோரின் அனுமதியுடன் பார்ப்பதற்கான திரைப்படங்களுக்கு யூஏ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அனைவரும் பார்க்கக்கூடிய படங்களுக்கு யூ சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இந்த திரைப்படங்கள் குறித்த விளம்பரங்களை வெளியிடும் போதும், எந்த சான்றிதழ் வகையைச் சேர்ந்த திரைப்படம் என்பதை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு சிபிஎஃப்சி அறிவுறுத்தியுள்ளது. தயாரிப்பாளர் விரும்பினால் யூ சான்றிதழை விளம்பரங்களில் வெளியிட்டுக் கொள்ளலாம்.

சுவரொட்டிகள், பத்திரிகை விளம்பரங்கள், நோட்டீஸ்கள், பதாகைகள் மற்றும் ஊடகங்களில் வெளியிடப்படும் திரைப்பட விளம்பரங்களில் சான்றிதழ் வகையை கட்டாயம் குறிப்பிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தணிக்கை சான்றிதழ் வகையை குறிப்பிடத் தவறுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய திரைப்பட சான்றளிப்பு வாரியத்தின் மண்டல அதிகாரி டி பாலமுரளி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News