உள்ளூர் செய்திகள்

அத்திக்கடவு-அவினாசி திட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2024-08-16 06:30 GMT   |   Update On 2024-08-16 06:30 GMT
  • அத்திக்கடவு-அவினாசி திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.
  • காணொலி காட்சி வாயிலாக நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது.

கோவை:

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களின் மூன்று தலைமுறை கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவினாசி திட்டம் நாளை தொடங்கப்பட உள்ளது.

திட்டத்தின் தொடக்க விழா ஈரோடு மாவட்டம் பவானி காலிங்கராயன் அணைக்கட்டு அருகில் அமைக்கப்பட்டுள்ள முதலாவது நீரேற்று நிலையத்தில் நாளை காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு, காணொலி காட்சி வாயிலாக பங்கேற்று அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

3 தலைமுறைகளின் கனவுதிட்டமான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட விசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

3 மாவட்ட மக்களின் 65 ஆண்டு கால கனவாக உள்ள இந்த அத்திக்கடவு-அவினாசி திட்டம் உருவானது பற்றிய விவரம் வருமாறு:-

பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக நீலகிரியும், கேரளத்தின் அட்டப்பாடி, ஆனைகட்டி போன்ற பகுதிகளும் உள்ளன. இந்தப் பகுதியில் உருவாகி வரும் பவானி ஆறு மீண்டும் தமிழகத்தின் நுழைவுப் பகுதியான அத்திக்கடவு வழியாக பில்லூர் அணைப் பகுதியை வந்தடைகிறது.

பில்லூர் அணையில் சேகரிக்கப்படும் தண்ணீர் கோவை மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்யும்போது வேகமாக பில்லூர் அணை நிரம்பிவிடுகிறது.

அணை நிரம்பியதும் பவானி ஆற்றின் வழியே வெளியேறும் நீர் சுமார் 60 கி.மீ தூரம் பயணித்து பவானிசாகர் (கீழ்பவானி) அணையை வந்தடைகிறது.

பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன வாய்க்கால் மூலம் 2.07 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கும், கொடிவேரி அணைக்கட்டில் இருந்து தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 25,000 பாசன நிலங்களும், காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலுக்கு 15,000 ஏக்கர் ஆயக்கட்டு நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

பல்வேறு சந்தர்ப்பங்களிலும் கீழ்பவானி அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து பில்லூர் அணை, கீழ்பவானி அணைகள் நிரம்பியதும் திறக்கப்படும் உபரிநீர் பயனின்றி 75 கி.மீ பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது மொத்தம் 225 கி.மீது தூரம் பயணிக்கும் பவானி ஆற்றில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருந்து வரக்கூடிய சிற்றாறுகளும் கலக்கின்றன.

இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவினாசி திட்டம் செயல்படுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அவினாசி, அன்னூர், காரமடை, திருப்பூர், சேவூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள குளம், குட்டை ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று அந்த பகுதிகளின் குடிநீர் ஆதாரத்தை பெருக்கும் வகையிலும், பாசன பரப்பை அதிகரிக்கும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டது.

காமராஜர் முதல்-அமைச்சர் ஆவதற்கு முன்பே இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த திட்டத்திற்காக 1957-ம் ஆண்டும் முதன் முதலில் அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பின்னர் பல்வேறு காலகட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பலமுறை முயற்சிகள் எடுத்தும் அது கைகூடவில்லை.

50 ஆண்டு கால கோரிக்கையாக உள்ள இந்த திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூர், ஈரோடு, கோவையில் உள்ள பல்வேறு கிராமங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்தன.

குறிப்பாக கடந்த 2016-ம் ஆண்டு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, அவினாசியில் பலரும் தொடர் பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, ஆய்வு பணிகளுக்கான ஆரம்ப கட்ட நிதியாக ரூ.3.27 கோடியை ஒதுக்கினார். அதனை தொடர்ந்து அரசாணை வெளியிட்டார். இந்த நிலையில் மீண்டும் 2017-ம் ஆண்டு அவினாசியில் ஒரு நாள் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே 2016-2017ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் அ.தி.மு.க அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டம் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என அறிவித்தது.

அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. இன்றைக்கு இந்த திட்டம் ரூ.1,916.41 கோடி நிதியில் முழுமை அடைந்துள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 28-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவினாசிக்கு நேரில் வந்து அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதையடுத்து 10 மாதங்களில் 1,045 குளம், குட்டைகளின் நீர் வழித்தடங்கள் ஆய்வு செய்யப்பட்டு, வரைபடம் தயாரிக்கப்பட்டு, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி பணிகள் அதிகார பூர்வமாக தொடங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம், பவானி அருகே காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் தண்ணீரை தேக்கி வைத்து அங்கிருந்து ஆண்டுக்கு 1.50 டி.எம்.சி உபரிநீரை பம்பிங் செய்து நிலத்துக்கு அடியில் பதிக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களின் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட உள்ளது.

இதற்காக பவானி, நல்ல கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் ஆகிய 6 இடங்களில் நீரேற்று நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்த நீரேற்று நிலையங்கள் அனைத்திலும் சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஈரோடு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இந்த திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தற்போது மழை பெய்து வருவதால் பவானி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதையடுத்து இத்திட்டத்திற்கு தேவையான தண்ணீர் காலிங்கராயன் அணைக்கட்டில் இருந்து உபரியாக வெளியேறி வருவதால், உபரிநீரை அத்திக்கடவு-அவினாசி திட்டத்திற்கு நீரேற்றம் செய்ய இதுவே சரியான காலகட்டம் என நீர்வளத்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்படி நாளை 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 32 ஏரிகள், ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 32 ஏரிகள், 971 குளம், குட்டைகள் என மொத்தம் 1045 குளங்களில் நீர் நிரப்பப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 958 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீரை செறிவூட்டும் இந்த திட்டத்தின் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு நீங்குவதுடன், பெருந்துறை, சென்னிமலை, நம்பியூர், கோபிசெட்டிபாளையம், ஊத்துக்குளி, அவினாசி, திருப்பூர், அன்னூர், சூலூர், பெரியநாயக்கன்பாளையம் மற்றும் காரமடை ஆகிய 13 ஒன்றியங்களில் 24 ஆயிரத்து 468 ஏக்கர் விளைநிலங்கள் பாசனம் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு அவினாசி திட்டமானது தமிழ்நாட்டில் இதுவரை நிறைவேற்றப்பட்ட நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களில் முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது.

இதுகுறித்து அத்திக்கடவு-அவினாசி திட்ட செயற்பொறியாளர் நரேந்திரன் கூறியதாவது:-

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 1045 குளங்கள், குட்டைகளில் ஏற்கனவே வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்று விட்டன.

மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பவானி ஆற்றில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் உள்ளது. இந்த திட்டபணிகளை மேற்கொண்டு வரும் எல் அண்டு டி நிறுவனம் 5 ஆண்டுகளுக்கு இதனை இயக்கி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

சில இடங்களில் பிறதுறையினர், உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பராமரிப்பு மேற்கொள்ளப்படும். சில இடங்களில் சாலையோரம் பதிக்கப்பட்டுள்ள குழாய்களில் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் கீழ் குளம், குட்டைகளில் சேகரமாகும் தண்ணீரின் அளவை அறிந்து கொள்ள சென்சார் உபகரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் அவை திருட்டு போய் உள்ளது. சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டு வந்தவுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்தி அவை உடனடியாக சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News