சூளைமேடு நேரு தெருவில் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு தேங்கிய மழை வெள்ளம்
- மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது.
- மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
சென்னை சூளைமேடு அண்ணா நெடும்பாதையை ஒட்டியுள்ள நேரு தெரு மிகவும் பள்ளமான தெருவாகும். சென்னை சாலிகிராமம், வடபழனி, கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் இந்த தெருவில்தான் வந்து சேருகிறது. இதனை சுற்றியுள்ள தெருக்கள் சற்று மேடாக காணப்படுவதால் இங்கிருந்து வெள்ளம் வெளியேறவில்லை.
இந்த பகுதியில் உள்ள மழை நீர் வடிகாலும் தூர்ந்து போய்விட்டதால் வெள்ளம் வடியாமல் 4 நாட்களாக தேங்கி கிடந்தது. மழை பெய்து கொண்டிருந்த போதே நேரு தெருவில் தேங்கிய வெள்ளம் ஆட்களை மூழ்கடிக்கும் அளவுக்கு காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி தவித்தனர்.
மழை ஓய்ந்து 3 நாட்களாக வெள்ளத்தை அப்புறப்படுத்திய நிலையில் நேரு தெருவில் வெள்ளத்தை அகற்ற நேற்று காலை வரை யாரும் வரவில்லை. இதனால் நேற்று காலை வரை ஒரு ஆள் உயரத்துக்கு வெள்ளம் தேங்கி நின்றது. நேற்று மதியத்துக்கு பிறகே அந்த பகுதியில் சாக்கடை குழாயில் பள்ளம் தோண்டி சரி செய்து மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று காலை அந்த பகுதியில் வெள்ளம் முழுமையாக வெளியேற்றப்பட்டது. இதனால் 4 நாட்களாக அந்த பகுதி மக்கள் உணவுக்கே வழியில்லாமல் தவித்தனர்.