உள்ளூர் செய்திகள்

நவீன தொழில்நுட்பத்தில் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மேடை

Published On 2023-02-28 14:50 IST   |   Update On 2023-02-28 14:50:00 IST
  • மேடையின் முன்பு சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
  • அமைச்சர் மா.சுப்ரமணியன் மேடை அமைப்பு பணியை அங்கேயே முகாமிட்டு கவனித்து வருகிறார்.

சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் நாளை மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள். நிகழ்ச்சிக்கு தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்குகிறார். டி.ஆர்.பாலு எம்.பி. வரவேற்று பேசுகிறார். நிறைவாக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றுகிறார்.

இந்த விழாவை மிக பிரமாண்டமாக கொண்டாட தி.மு.க.வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். இதற்காக அரசியல் கட்சிகள் நடத்தும் கூட்டத்தில் முதல் முறையாக முற்றிலும் மாறுபட்ட வகையில் நவீன தொழில்நுட்பத்துடன் எல்.இ.டி. விளக்குகளால் பிரம்மாண்ட மேடை அமைக்கப்படுகிறது. சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த மேடை அமைக்கும் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டு வருகிறார்கள். 60 அடி அகலத்தில் அமைக்கப்படும் இந்த மேடை முழுக்க எல்.இ.டி விளக்குகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேற்பகுதியில் உதயசூரியன் சின்னம் பல வண்ணங்களில் எல்.இ.டி. விளக்குகளால் ஜொலிக்கிறது.

மேடையின் முன்பு சுமார் ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேடைக்கு நேர் எதிரே 100 அடி உயரத்தில் பிரமாண்டமான 6 கொடி கம்பம்பங்கள் நடப்பட்டுள்ளன. இதில் 2 கொடி கம்பங்களில் 30 மீட்டர் அகலத்தில் தி.மு.க. கொடி பறக்க விடப்பட்டுள்ளது. மற்ற கொடிக்கம்பங்களில் காங்கிரஸ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி, ராஷ்டிய ஜனதா தளம் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. இந்த கம்பங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அந்தந்த கட்சி தலைவர்களின் படங்கள் ஒளிர விடப்பட்டுள்ளது. மேடையில் இருக்கும் தலைவர்கள் அவர்கள் கட்சிக்கொடி மற்றும் புகைப்படங்களை பளிச்சென்று பார்க்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர 50 அடி உயரத்தில் 8 கொடி கம்பங்களில் தி.மு.க. கொடிகள் திடலை சுற்றிலும் பறக்க விடப்பட்டுள்ளது.

வழக்கமாக சீரியல் பல்புகளில் தலைவர்களின் கட் அவுட்கள் மின்னும். ஆனால் இங்கு 38 அடி உயரத்தில் முற்றிலும் எல்.இ.டி. விளக்குகளால் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோருடைய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

பொதுக் கூட்டத்திடலை சுற்றிலும் மு.க.ஸ்டாலினின் 21 மாத ஆட்சியின் சாதனைகளை 200 பேனர்களில் வைத்துள்ளனர். இதில் ஆங்கிலம் மற்றும் தமிழில் சாதனைகள் இடம் பெற்றுள்ளன.

தலைவர்கள் திடலுக்குள் வரும் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 20 அடி அகல பேனர்கள் இடையிடையே 100 வாழை மரங்கள் என 2000 வாழை மரங்களும் கட்டப்படுகிறது. இந்திய அளவில் வரும் தலைவர்கள் வந்து அமர்ந்து தனியாக உரையாடுவதற்காக ஏ.சி. அரங்கம் ஒன்றும் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. ஒய்.எம்.சி.ஏ. வளாகத்திற்குள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை அண்ணா சாலையில் செல்லும் பொதுமக்களும் பார்க்க வசதியாக சாலை ஓரத்தில் 60 அடி நீளத்திற்கு எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொண்டர்களும் பொதுமக்களும் அமரும் ஒவ்வொரு இருக்கையிலும் தண்ணீர் பாட்டில், ஒரு குளிர்பான பாக்கெட் வைக்கப்பட்டிருக்கும். இந்த மேடை அமைப்பு தொழில்நுட்ப ஏற்பாடுகள் விடிய விடிய நடைபெற்று வருகின்றன. அமைச்சர் மா.சுப்ரமணியன் மேடை அமைப்பு பணியை அங்கேயே முகாமிட்டு கவனித்து வருகிறார்.

Tags:    

Similar News