உள்ளூர் செய்திகள்

3 நாட்கள் தொடர் விடுமுறை- வெளியூர் செல்ல அரசு, ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்ய ஆர்வம்

Published On 2023-04-24 07:31 GMT   |   Update On 2023-04-24 07:31 GMT
  • தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது.
  • சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

அரசு பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர்.

வருகிற 28-ந்தேதியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு முடிவதால் ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க அரசு திட்டமிட்டுள்ளது.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படுவதால் வெளியூர் பயணம் அதிகரித்து வருகிறது. இதனால் ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர்.

தமிழ் புத்தாண்டு, ரம்ஜான் என கடந்த 2 வார இறுதியிலும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலித்தனர். அதிக கட்டணம் கொடுத்து பயணம் செய்ய வசதி இல்லாத ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நாடி செல்கின்றனர்.

அரசு பஸ்களிலும் தற்போது கூட்டம் அதிகரித்து வருகிறது. கட்டணம் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் அரசு பஸ்கள் பக்கம் திரும்பி வருகின்றனர். மே மாதத்தில் பயணம் செய்ய மக்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

தென்மாவட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சிறப்பு ரெயில்கள் எல்லாம் நிரம்பிவிட்டதால் அரசு பஸ்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மே தினம் 1-ந்தேதி (திங்கட் கிழமை) அரசு விடுமுறை நாட்களான வருகிற 29 (சனிக்கிழமை) மற்றும் (ஞாயிற்றுக்கிழமை) 30-ந் தேதியை அடுத்து வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை ஆகும்.

இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கோயம்பேட்டில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 28-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கூட்டம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் மட்டுமின்றி தமிழகத்தின் பிற நகரங்களில் இருந்தும் பயணம் செய்ய அரசு விரைவு பஸ்களில் முன்பதிவு செய்துள்ளனர். 3 நாட்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்து இருப்பதால் பிற போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதலாக பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளனர்.

இன்னும் 1½ மாதத்திற்கு பஸ், ரெயில்களில் கூட்டம் அலைமோதக்கூடும். அரசு விரைவு பஸ்களில் ஆன்லைன் வழியாக முன்பதிவு செய்து நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து விரைவு போக்குவரத்து கழக உயர் அதிகாரி கூறுகையில், 'முன்பதிவு அதிகரித்ததால் பிற போக்குவரத்து கழகத்தின் மூலம் கூடுதலாக பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். அதனால் முன்பதிவை ஒவ்வொரு நாளும் கண்காணித்து வருகிறோம். தேவைக்கேற்ப கூடுதலாக பஸ்களை இயக்கவும் திட்டமிட்டுள்ளோம்' என்றார்.

Tags:    

Similar News