உள்ளூர் செய்திகள்
மதுரையில் ஊழல் புகார்- வேலூர் ஜெயில் அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
- மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
- சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் மாவட்டம், அரியூர் அம்மையப்பன் நகரை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் வேலூர் மத்திய ஜெயிலில் சிறை நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 2019 முதல் 2023 வரை மதுரை மத்திய ஜெயிலில் நிர்வாக அலுவலராக பணியாற்றினார். அப்போது கைதிகள் தயாரிக்கும் கைவினை பொருட்களுக்கான மூலப் பொருட்களை வாங்குவதாக கூறி ரூ.1 கோடியே 30 லட்சம் ஊழல் செய்ததாக மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் வந்தது. இதுகுறித்து மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்தநிலையில் வேலூர் அரியூரில் வசித்து வரும் சிறை நிர்வாக அலுவலர் தியாகராஜன் வீட்டில் இன்று வேலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சோதனை சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.