உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் வைக்க கடும் கட்டுப்பாடு- உளவுத்துறை தகவலால் உஷார் நடவடிக்கை

Published On 2023-08-21 06:18 GMT   |   Update On 2023-08-21 06:18 GMT
  • சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது.
  • சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை:

விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் இந்து அமைப்புகள் மற்றும் பொதுநல சங்கத்தினரால் சிறப்பாக கொண்டாடப் பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமான விநாயகர் சிலைகளை வைத்து வழிபட இந்து அமைப்பினர் திட்டமிட்டு உள்ளனர். இந்து முன்னணி, பாரத் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்ய திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 18-ந் தேதி பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்துக்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் போலீசார் இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகளை தொடங்கி இருக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தியையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பது பற்றி மாநிலம் முழுவதும் உளவுப் பிரிவு போலீசார் உஷாராகி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

விநாயகர் சதுர்த்தி விழாவில் எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லாத வகையில் தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி தொடர்பாக போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

பிரச்சினைக்குரிய இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கக் கூடாது. சிலைகளை வைப்பதற்கு அனுமதி கேட்கும் போதே பிரச்சினைக்குரிய இடமாக கருதப்பட்டால் அந்த இடத்தில் எக்காரணத்தை கொண்டும் சிலைகளை வைக்கக் கூடாது. இதனை மீறி யாராவது சிலைகளை வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக சிலைகளை வைக்கக் கூடாது.

சிலைகளை அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். இதற்காக 17 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனை மீறி மாற்று வழிகளில் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சிலைகளை கரைப்பதற்கு திருவொற்றியூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை, எண்ணூர் உள்ளிட்ட நான்கு இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது.

இந்த இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். வேறு பகுதிகளில் குறிப்பாக அனுமதிக்கப்படாத இடங்களில் சிலைகளைக் கரைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும். விநாயகர் சதுர்த்தி விழா மேடையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் விழா ஏற்பாடுகள் பணியில் இருக்க வேண்டும். விநாயகர் சிலைகளை அமைக்கும் இடத்தில் போடப்படும் பந்தல் தீ பிடிக்காத வகையில் அமைக் கப்பட்டிருக்க வேண்டும். பிற மதத்தினர் புண்படும் வகையில் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்ப டும் என்பது போன்ற 20-க்கு மேற்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி தொடர்பாக 5 கட்டங்களாக ஆலோசனை நடத்த போலீ சார் முடிவு செய்துள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து மேற் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. முதலில் தங்களது பகுதி யில் சிலைகளை அமைப்பவர்களை அழைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் பிறகு உதவி கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரிகள் ஆலோசனை நடத்து கிறார்கள்.

3-வதாக துணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் குழு சிலை அமைப்பவர்களுடன் ஆலோசனை நடத்துகிறது. இதன் பிறகு இணை கமிஷனர் தலைமையிலான அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

கடைசியாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவல கத்தில் சிலைகளை அமைக்கும் அமைப்பினரின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கூடுதல் கமிஷனர் அந்தஸ்திலான அதிகாரி ஒருவர் கலந்து கொண்டு சிலைகளை கரைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளையும் வழங்க உள்ளார். விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் இருக்கும் இடங்களில் செப்டம்பர் 18-ந் தேதியில் இருந்து ஒரு வார காலத்துக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி சென்னையில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். டி.ஜி.பி. சங்கர் ஜிவால் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு உரிய அறிவுரைகளை வழங்கி வருகிறார்.

சென்னையில் போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் அனைத்து துணை கமிஷனர்களுக்கும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளார்.

குறிப்பாக விநாயகர் சிலைகளை அமைக்கும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளனவா? என்பதை சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர்கள் நேரில் சென்று அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.

அதே நேரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதி யான முறையில் நடத்தி முடிக்க சென்னை போலீசா ரும் தமிழக காவல்துறை யினரும் முடிவு செய்து உள்ளனர்.

Tags:    

Similar News