உள்ளூர் செய்திகள்

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சி தொடர்கிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2023-05-19 02:35 GMT   |   Update On 2023-05-19 02:35 GMT
  • ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
  • 104 சேவை மையத்தில் பயிற்சி பெற்ற 20 மனநல ஆலோசகர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

சென்னை :

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள 104 சேவை மையத்தில், 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதிஷ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் டாக்டர் கோவிந்தராவ், மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் சாந்திமலர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் டாக்டர் சண்முகக்கனி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த சேவை மையத்தில் பயிற்சி பெற்ற 20 மனநல ஆலோசகர்கள் பணி அமர்த்தப்பட்டு 'நீட்' தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

அதிக மன அழுத்தத்தில் உள்ள மாணவர்களை கண்டறிந்து மாவட்ட மனநலக்குழு மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் குழு இணைந்து அந்த மாணவர்களை கண்காணித்து வருகின்றனர். இந்தக்குழு அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.

தொடர்ச்சியாக 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெறும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News