உள்ளூர் செய்திகள்

சென்னைக்கு சொகுசு கார்கள் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ

Published On 2024-06-26 08:15 GMT   |   Update On 2024-06-26 08:15 GMT
  • பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
  • கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது.

ராணிப்பேட்டை:

மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் பகுதியில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு செல்வதற்காக விலை உயர்ந்த 8 சொகுசு கார்களை ஏற்றி கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று இன்று காலை வந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த அம்மணதாங்கல் பகுதியில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் டிரைவர் சோனு யாதவ் லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றுள்ளார்.

அப்போது கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் திடீரென தீ பிடித்து எஞ்சின் முழுவதும் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது.

இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக போலீசார் மற்றும் ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் ராணிப்பேட்டை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டெய்னர் லாரியின் முன்பக்கம் எரிந்த தீ மேலும் பரவி விடாமல் அணைத்தனர்.

கண்டெய்னர் லாரியில் முன்பக்கத்தில் எரிந்த தீ உரிய நேரத்தில் அணைக்கப்பட்டதால் பின்பக்கம் இருந்த பல லட்சம் மதிப்பு உள்ள சொகுசு கார்கள் எந்தவித சேதமும் இன்றி தப்பின.

கண்டெய்னர் லாரியின் முன்பக்க கேபினில் மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம் என கூறப்படுகிறது. பெட்ரோல் பங்க் அருகில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உடனடியாக தீயணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News