கோபிசெட்டிபாளையம் அருகே ஊருக்குள் புகுந்த யானை
- யானை கண்டதும் அப்பகுதி மக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தனர்.
- ஆவேசமடைந்த யானை அந்த பகுதியில் உள்ள மரங்களை உடைத்து சேதப்படுத்தி மலையை சுற்றி சுற்றி வருகிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வரச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டெருமை, மான் உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் டி.என்.பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து வழி தவறி வந்த ஆண் யானை ஒன்று இன்று காலை 5.30 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் அருகே மூலவாய்க்கால், குமரகிரி முருகன் கோவில் அருகே வந்தது.
இந்த கோவில் மலைமேல் உள்ளது. சுற்றி வனப்பகுதி அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் வழி தவறி வந்த ஆண் யானை குமரகிரி முருகன் கோவில் மலைப்பகுதியை சுற்றி சுற்றி வருகிறது. ஆண் யானை பார்க்க மிகவும் பிரம்மாண்டமாக பெரிய தந்தங்களுடன் ஆவேசமாக மலைப்பகுதி சுற்றி சுற்றி வருகிறது. யானை கண்டதும் அப்பகுதி மக்கள் அலறடித்து ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.டி. என். பாளையம் ரேஞ்சர் மாரியப்பன், விளாமுண்டி ரேஞ்சர் கணேஷ் பாண்டி, வன அலுவலர் பழனிச்சாமி மற்றும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து யானையை வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் ஆவேசமடைந்த யானை அந்த பகுதியில் உள்ள மரங்களை உடைத்து சேதப்படுத்தி மலையை சுற்றி சுற்றி வருகிறது. யானை ஊருக்குள் புகுந்த செய்தி காட்டு தீ போல் பரவியதால் யானை பார்க்க 100-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடிவிட்டனர். கூட்டத்தை கண்டதும் யானை மேலும் ஆவேசம் அடைந்து பிளிரியபடி சுற்றி சுற்றி வருகிறது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு மேலாக யானை போக்கு காட்டி வருகிறது.
யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் முயற்சியில் தொடர்ந்து வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஒலிபெருக்கி மூலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பாக சூழ்நிலை நிலவி வருகிறது.