தமிழ்நாடு

சிறுநீர் கழித்ததாக வெளியேற்றம்- அரசு மருத்துவமனை ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயல்

Published On 2024-07-05 09:23 GMT   |   Update On 2024-07-05 09:23 GMT
  • கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார்.
  • சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மதுரை:

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தென் மாவட்டத்திலேயே மிகப்பெரிய அரசு மருத்துவமனையாகும். இங்கு தினமும் 3000-க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும், 500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சைக்காக சேர்க்கப்படுகின்றனர். தற்போது இந்த அரசு ஆஸ்பத்திரியில் உயர்தர சிகிச்சைக்காக பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கூடுதல் கட்டிடங்கள் மற்றும் படுக்கை வசதிகளும் அதிகரிக்கப்பட்ட நிலையில் தலைக் காயம், விபத்து சிகிச்சை, உயிர் காக்கும் பிரிவு என்று அண்ணா பஸ் நிலைய பகுதியில் பிரமாண்ட கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது. இங்கும் தினசரி 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில் மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியை சேர்ந்த சமையல் தொழிலாளியான காட்டுமாரி (வயது 58) என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். இதில் அவரது மார்பு, கால் மற்றும் மணிக்கட்டுகளில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவரது மகன் வெளியூரில் இருப்பதால் காட்டுமாரி தனியாக ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரை அருகில் இருந்து கவனிக்க யாரும் இல்லாத நிலையில் வலதுகாலில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக அவரால் நடக்க முடியவில்லை. இதனால் ஆஸ்பத்திரியின் வராண்டா பகுதியில் காட்டுமாரி சிறுநீர் மற்றும் இயற்கை உபாதைகளை கழித்ததாக தெரிகிறது. இதனால் ஆஸ்பத்திரி பணியாளர்கள் காட்டுமாரியை அடிக்கடி வந்து எச்சரித்ததுடன், தரக்குறைவான வார்த்தைகளாலும் திட்டி உள்ளனர்.

இந்த நிலையில் காட்டுமாரி தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறுநீர், இயற்கை உபாதைகளை கழித்ததால் ஆத்திரமடைந்த ஆஸ்பத்திரி பணியாளர்கள் அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கிருந்து வெளியேற்றி அருகே உள்ள பஸ் நிலைய பிளாட் பாரத்தில் கொண்டு விட்டதாக தெரிகிறது.

இதனால் நடக்க வழி இல்லாமல் சாலை ஓரத்திலேயே காட்டுமாரி முடங்கினார். இந்த நிலையில் சாலை ஓரத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் காட்டுமாரியின் முனகல் சத்தம் கேட்டு அவரிடம் விசாரித்துள்ளனர்.

அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள் இங்கு கொண்டு வந்து போட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த சாலையோர பணியாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடம் நோயாளி குறித்து தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக அங்கு வந்த தொண்டு நிறுவனத்தினர் சாலையோரத்தில் அனாதையாக கிடந்த காட்டுமாரியை மீட்டு மீண்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அரசு ஆஸ்பத்திரி ஊழியர்களின் மனிதாபிமானமற்ற இந்த செயல் காரணமாக கடந்த 2 நாட்களாக சிகிச்சை எதுவும் இன்றி காட்டுமாரி அவதி அடைந்துள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது தொடர்பாக மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் தர்மராஜ் கூறியதாவது:-

முதியவர் காட்டுமாரி தொடர்பான மதுரை மருத்துவமனை ஆவணங்களில் கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும், கடந்த 2 நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்து தலைமறைவாகி விட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் மீண்டும் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

நோயாளியை வெளியேற்றியதாக ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது கூறப்பட்டுள்ள புகார் தொடர்பாக மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதில் தவறுகள் நடந்திருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ரோட்டில் மீட்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News