வெப்பஅலை: ஆஸ்பத்திரிகளில் பொதுமக்களுக்கு 1000 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல்
- 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும்.
- வெப்பவாதம் சம்பந்தமாக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன.
சென்னை:
தமிழகம் முழுவதும் கோடை வெப்பம் அதிகரித்துள்ளதால் வெப்ப வாதம் மற்றும் வெப்ப தாக்கத்தால் ஏற்படும் எதிர்பாராத நோய்களை பொதுமக்கள் சந்திக்க நேரிடும்.
எனவே பொதுமக்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை எடுத்துள்ளது. இதுபற்றி சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி கூறியதாவது:-
வெப்ப அலையை சமாளிப்பது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் நடந்த கூட் டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிளும் மேற் கொள்ள வேண்டிய பணிகள் பற்றி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெப்பம் சம்பந்தமாக ஏற்படும் நோய் தாக்கங்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டுகள் திறக்கப்பட்டு உள்ளன. தேவையான மருத்துவ ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகளுக்கு வரும் வெளிநோயாளிகள், பொதுமக்கள் இலவசமாக ஓ.ஆர்.எஸ்.கரைசல் குடித்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பஸ், ரெயில் நிலையங்கள் பொதுமக்கள் கூடும் இடங்கள் என 1000 இடங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவமனை களில் 10.37 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் இருப்பில் உள்ளன. மேலும் கோடை காலம் நிறைவடையும் வரை தடையின்றி வழங்க ஏதுவாக கூடுதலாக 88.77 லட்சம் பாக்கெட்டுகள் கேட்டுள்ளோம்.
மருத்துவமனைகளில் பாதுகாப்பான குடிநீர் தட்டுபாடின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து ஆம்பு லன்சுகளிலும் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்படு பவர்களுக்கு உதவ ஐஸ் ஜெல் பாக்கெட்டுக்கள், ஐஸ் பெட்டிகள், தார்பாலின் ஆகியவற்றை தயாராக வைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
பொதுமக்களும் முன்னெச்சரிக்கையாக பகல் 11 மணி முதல் 3 மணி வரை வெளியே செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
வெளியே செல்பவர்கள், வெயில் நேரத்தில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.