கொடைக்கானலில் மீண்டும் கடும் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்
- திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி
- கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது. கொடைக்கானலில் வெயில் அதிகரித்த நிலையில் நேற்று அதிகாலையில் சாரலாக தொடங்கிய மழை பின்னர் கனமழையாக பெய்தது.
தொடர்ந்து பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ-மாணவிகள் சிரமமடைந்தனர். பகல் பொழுதிலேயே கடும் பனிமூட்டம் நிலவியதால் இரவு போல் காட்சியளித்தது.
இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர். மேல்மலை பகுதியில் பெய்த மழை சாகுபடி பணிக்கு உகந்ததாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
மேலும் வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வந்தது. இதனை அணைக்க வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர். தற்போது பெய்துள்ள மழை காட்டுத்தீயை கட்டுப்படுத்த உதவும் என அவர்கள் தெரிவித்தனர். கோடைகால சீசன் தொடங்க உள்ள நிலையில் மழைப்பொழிவு குளிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இருந்தபோதும் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திண்டுக்கல் 20, காமாட்சிபுரம் 13.2, நிலக்கோட்டை தாலுகா 17, நிலக்கோட்டை 16.20, சத்திரப்பட்டி 7.2, வேடசந்தூர் தாலுகா அலுவலகம் 8.4, புகையிலை ஆராய்ச்சி நிலையம் 8.2, பழனி 7, கொடைக்கானல் ரோஸ்கார்டன் 13, பிரையண்ட் பூங்கா 14 என மாவட்டம் முழுவதும் 124.20 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.