"யார் அந்த சார்'' என யாருமே இல்லையாம் - மாணவியை மிரட்ட "சும்மா'' சொன்னதாக தகவல்
- குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
- தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் நியமித்த 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரித்து சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றப்பத்திரிகையில் ஞானசேகரன் பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. வேறு யாருக்கும் அதில் தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தான் இருந்ததற்கான தடயம் மற்றும் ஆதாரத்தை மறைப்பதற்காக அவர் தனது செல்போனை பிளைட் மோடுக்கு மாற்றினார். தொப்பி அணிந்து தனது முகத்தை மறைத்துக் கொண்டார்.
பல்கலைக்கழக படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த மாணவியையும், அவரது நண்பரான மாணவரையும் பார்த்த ஞானசேகரன், மாணவரை தாக்கி கல்லூரி அடையாள அட்டையை பறித்தார். பின்னர் அவர்களை வீடியோ எடுத்திருப்பதாகவும், அதை டீன் மற்றும் ஊழியர்களிடம் காண்பிப்பதாகவும் மிரட்டினார். அவர்கள் கெஞ்சியதால் மாணவரை அங்கிருந்து அனுப்பிவிட்டு மாணவியின் செல்போனை பிளைட் மோடுக்கு மாற்ற சொன்னார். பின்னர் மாணவியை ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். அதை வீடியோவாகவும் பதிவு செய்தார். தான் பல்கலைக்கழக அதிகாரி என்ற தோற்றத்தை ஏற்படுத்துவதற்காக யாரிடமோ போனில் பேசுவதாக நடித்து, "சார், நான் மாணவியை எச்சரித்து போக விடுகிறேன்" என்று கூறியுள்ளார்.
மாணவி பெற்றோரின் செல்போன் எண்களையும் பெற்றுக்கொண்டு தான் அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை செல்போனில் மறைத்து வைத்திருந்ததாகவும், பின்னர் அதை அழித்து விட்டதாகவும் கூறியுள்ளார்.
மேற்கண்ட தகவல்கள் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளன.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஞானசேகரன் பயன்படுத்திய செல்போனின் அழைப்புகளை சிறப்பு புலனாய்வு குழுவினர் ஆய்வு செய்தனர். அவர் மாணவியை மிரட்டுவதற்காக யாருடனோ செல்போனில் பேசுவது போல் நடித்து, அவரை 'சார்' என்று சும்மா அழைத்தார். உண்மையில் சார் என்று யாரும் இல்லை' என்று தெரிவித்துள்ளார்.