போரூரில் 3 ஆண்டுகள் ஆகியும் பாதாள சாக்கடை பணி முடியவில்லை- சேதம் அடைந்த சாலைகளால் பொதுமக்கள் கடும் அவதி
- சாலையில் ஆழ்துளை பள்ளங்கள் உள்ளதால் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது
- பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
சென்னை:
போரூரில் உள்ள துண்டலம், அடையாளம்பட்டு பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை.
இதனால் அப்பகுதி மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சமீபத்தில் பெய்த மழையில் சாலையில் கடும் வெள்ளம் ஏற்பட்டதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தற்போது தனியார் ஆஸ்பத்திரியை ஒட்டியுள்ள தெருவில் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக போரூர் பகுதியை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-
சாலையில் ஆழ்துளை பள்ளங்கள் உள்ளதால் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைநீர் தேங்கி வீடுகளுக்குள் செல்கிறது. இதனால் பாதசாரிகள் கூட நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பணி தொடங்கி 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது என்றார்.
செப்டம்பர் 30-ந்தேதிக்குள் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு பகுதியிலும் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து உள்ளூர் மக்களுக்கு தெரிவிக்குமாறு துறைகளுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை பிறப்பித்தாலும் நடப்பு பணிகள் குறித்து தெரியாமல் இருப்பதாக போரூர் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.