மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு - ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் உத்தரவு
- தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்
- வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
நாகர்கோவில் :
நாகர்கோவில் மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் வடசேரியில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று மனு அளித்தனர். அந்த வகையில் மொத்தம் 19 மனுக்கள் அளிக்கப்பட்டன. அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் மகேஷ் அதுதொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
முன்னதாக இன்று காலை 2-வது வார்டுக்குட்பட்ட தனியார் மருத்துவமனை முன்பு, பின்பு உள்ள பகுதியில் மேயர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பின்புறம் உள்ள மகளிர் தங்கும் விடுதி முன்பு தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து களியங்காடு 4 முக்கு ரோடு, விவேகானந்தர் தெரு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது களியங்காடு 4 முக்கு ரோடு பகுதியில் தண்ணீர் தேங்குவதாக புகார் தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து மேயர் மகேஷ், இந்த பகுதியில் கல்வெட்டு (சிறிய பாலம்) அமைக்க உத்தரவிட்டார். மேலும் சாலையையும் உயர்த்தி காங்கிரீட் தளம் அமைக்கவும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார். பின்னர் தெருவில் வீடுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அதிக அளவு இருந்தது. இதனை பார்த்த மேயர் வீடுகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.
அப்போது மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், மண்டல தலைவர்கள் செல்வகுமார், ஜவகர், தி.மு.க. மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் உடனிருந்தனர்.
மேலும் 44-வது வார்டுக்குட்பட்ட மறவன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்தில் ரூ.60 லட்சத்தில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.