முதல்வரின் தீர்வு தளம் நிகழ்ச்சி மூலம் கடைகோடி கிராமங்களில் உள்ள பிரச்சனைகளுக்கும் வேகமாக தீர்வு
- அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
- தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு
கன்னியாகுமரி:
தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள டவுண்ஹால் வளாகத்தில் தீர்வு தளம் நிகழ்ச்சி பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல்மங்கை தலைமையில் நேற்று நடந்தது. பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபன் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது :-
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்.ஆட்சி பொறுப்புக்கு வந்த நாளிலிருந்து தொலைநோக்கு பார்வையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் குமரி மாவட்டத்தின் கடைகோடி கிராமங்களுக்கும் சென்று அப்பகுதிகளிலுள்ள சாதாரண ஏழை, எளிய மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தீர்வுதளம் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்று தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்களுடைய கோரிக்கைகள் எதுவாக இருந் தாலும், அழகிய மண்டபம் மற்றும் கருங்கல்லில் அமைந்துள்ள எனது முகாம் அலுவலகத்தில் நேரில் வந்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உங்களது கோரிக்கைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
தீர்வு தளம் திட்டத்தின் நோக்கம் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித்திட்ட பணிகள் பொதுமக்களை சென்றடைய வேண்டும் என்பதே ஆகும். பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களில் குடிநீர் வசதி, சாலை வசதி, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், விதவை உதவித்தொகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, உள் ளாட்சி அமைப்புகளின் வாயிலாக அடிப்படை கட்டமைப்பு வசதிகள். நீண்டகாலமாக கிடப்பில் உள்ள பட்டா பிரச்னை, பொதுமக்களின் அன்றாட பிரச்னைகள் உள்பட தகுதியுள்ள அனைத்து மனுக்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்.
குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் பழுநடைந்த சாலைகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.
மாவட்ட சமூக நலத்துறை அலுவவர் சரோஜினி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் ஷீலா ஜாண், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சகிலா பானு, கல்குளம் வட்டாட்சியர்வினோத், அரசு வழக்கறிஞர்கள் ஜாண்சன், அரசு அலுவ லர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.