க.பரமத்தியில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம்
- க.பரமத்தியில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையம் திறக்கப்பட்டது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
கரூர்:
பெண்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற திட்டத்தின் கீழ் கரூர் ஊரக உட்கோட்டத்தில் க.பரமத்தியில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
இதையொட்டி க.பரமத்தியில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. இ.சுந்தரவதனம் ரிப்பன் வெட்டி புதிய காவல் நிலையத்தை திறந்து வைத்து, காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். அரவக்கு றிச்சி டிஎஸ்பி முத்தமிழ்செல்வன், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரூபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரூபி பொறுப்பு இன்ஸ்பெக்டராக செயல்படுவார். கரூர் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, வேலாயுதம்பாளையம் ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விசாரணை இங்கு மேற்கொள்ளப்படும்.