உள்ளூர் செய்திகள்

பழனி மலைக்கோவில் (கோப்பு படம்)

ஓணம் பண்டிகைையயொட்டி பழனியில் கேரள பக்தர்கள் வருகை அதிகரிப்பு 2 மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2022-09-11 10:24 IST   |   Update On 2022-09-11 10:24:00 IST
  • 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து வாரவிடுமுறை என்பதால் கேரளாவில் இருந்து அதிகளவு பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.
  • மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர்.

பழனி:

தமிழ்கடவுள் முருகனின் 3-ம் படைவீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கடந்த 8-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதனைெதாடர்ந்து வாரவிடுமுறை என்பதால் கேரளாவில் இருந்து அதிகளவு பக்தர்கள் பழனிக்கு வந்திருந்தனர்.

மேலும் உள்ளூர் பக்தர்கள் மற்றும் தமிழகத்தின் பிறபகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஸ்நிலையம், அடிவாரம், திருஆவினன்குடி கோவில், மலைக்கோவில், கிரிவீதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

யானைப்பாதை, படிப்பாதை மற்றும் மின்இழுவை ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அதிகளவு பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோவிலில் சுமார் 2 மணிநேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்காக பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

அதிகளவு பக்தர்கள் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் போக்குவரத்து விதிமுறைகளை வாகனஓட்டிகள் பின்பற்றாததால் முகூர்த்த நாட்கள், விடுமுறை நாட்களில் அடிவாரம் பகுதியில் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன.

எனவே போலீசார் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு 3 நிமிடத்தில் ரோப்காரில் சென்றுவிடலாம். மேலும் பழனி மலை அழகை கண்டு ரசித்தபடி செல்லலாம் என்பதால் ரோப்காரில் செல்ல பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் ரோப்கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நேற்று நிறுத்தப்பட்டது.

மேலும் 3-வது மின்இழுவை ரெயில் சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால் முதியவர்கள், சிறுவர்கள் செல்ல சிரமம் அடைந்தனர். எனவே விடுமுறை நாட்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News