உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சட்ட நடவடிக்கை- மின்வாரிய அதிகாரி எச்சரிக்கை

Published On 2023-04-16 09:03 GMT   |   Update On 2023-04-16 09:03 GMT
  • மின்வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
  • தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும்.

கோவை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மண்டல தலைமை பொறியாளர் வினோதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாய நிலங்களில் காட்டு விலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்கவும், மனிதர்கள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைவதை தடுக்கவும், சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி அமைக்கப்பட்டதினால் மின்வேலிகளில் மனிதர்களும், விலங்குகளும் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

மின் வேலி அமைப்பது இந்தியா மின்சார சட்டம் 2003-ன் படி தண்டனைக்குரிய குற்றமாகும். விவசாய நிலங்களில் மின் வேலி அமைத்தால் சம்பந்தப்பட்ட மின் இணைப்பு துண்டிக்கப்படுவதுடன் சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். எனவே விவசாய நிலங்களில் மின் வேலி அமைக்கக் கூடாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறி உள்ளார்.

பொதுமக்கள் மின் விபத்துகளை தவிர்ப்பது குறித்து அவர் வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தரமான ஐ.எஸ்.ஐ. குறியீடு பெற்ற மின்சாதனங்களை உபயோகிக்கவும், மின் பணிகளை அங்கீகரிக்கப்பட்ட எலக்ட்ரீசியனை கொண்டு பணி செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

மின் கம்பிகள் மற்றும் இழுவை கம்பிகளில் ஈரத்துணிகளை உலர்த்தக்கூடாது. மின் நுகர்வோர்கள் தங்களது மின் வயரிங்குகளை முறையாக ஆய்வு செய்து பழுதடைந்த வயரிங்குகளை புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மின் நுகர்வோர் தங்களது வீடுகள், வளாகத்தில் மின் இணைப்பில் ஆர்சிடி, இஎல்சிபி-யை பொருத்து மாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.

கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது அருகில் மின் பாதைகள் இருப்பின் உரிய இடை வெளியோடும், உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றியும் பணிகள் மேற்கொண்டு விபத்தினை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News