உள்ளூர் செய்திகள்

மாநில கல்விக்கொள்கை விவகாரம்: கவர்னர்கள் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது- அமைச்சர் பொன்முடி

Published On 2023-05-31 03:11 GMT   |   Update On 2023-05-31 03:11 GMT
  • 164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
  • சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.

சென்னை:

அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மாநில கல்லூரியில் நடக்கும் கலந்தாய்வை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி நேற்று பார்வையிட்டார்.

அவருடன் உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், கல்லூரி கல்வி இயக்குனர் கீதா ஆகியோரும் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

164 அரசு கலை கல்லூரிகளில் சேருவதற்கு 2 லட்சத்து 46 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்கள் இருக்கின்றன. தற்போது சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்கி உள்ளது. சிறப்பு ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 643 மாணவ-மாணவிகள் தமிழ்நாடு முழுவதும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மாணவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல், விரும்பிய இடங்களில் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். நாளை (வியாழக்கிழமை) முதல் பொது கலந்தாய்வு தொடங்க இருக்கிறது.

கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு 15 சதவீதம் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. அரசு கல்லூரிகளில் சேரும் மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதி, கல்லூரி கட்டணம் என்று அறிவித்ததன் அடிப்படையில் ஆர்வமுடன் பலர் சேருகிறார்கள். அதேபோல், புதுமை பெண் திட்டம் அறிவிக்கப்பட்டதாலும், மாணவிகளின் விண்ணப்பப்பதிவு, சேர்க்கை அதிகரித்துள்ளது.

கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்தால் மட்டும் போதாது. கல்வித்தரமும் உயர வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருக்கிறார். மாணவர்களின் திறமையையும், தகுதியையும் வளர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதுதான் நான் முதல்வன் திட்டம்.

சிங்கப்பூர் சுற்றுப்பயணத்தின்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதன்படி, அங்குள்ள பேராசிரியர்கள், மாணவர்களும், இங்குள்ளவர்களும் அங்கே சென்று கல்வித்தரத்தை அறிந்து கொள்ள முடியும். வேலைவாய்ப்பு பயிற்சிகளை கொடுக்கவும் இயலும். வரும் காலங்களில் உயர்கல்வித்துறை மாணவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப செயல்படுகிற துறையாக மாறும்.

மாணவர் சேர்க்கையை போல, கல்லூரிகளில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. கோர்ட்டில் வழக்கு இருக்கிறது. அந்த வழக்கு முடிந்ததும், ஜூன் முதல் வாரத்தில் அதற்கான பணிகள் விரைவுப்படுத்தப்படும்.

எல்லா பல்கலைக்கழகங்களிலும் மொழி பாடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறோம். அதுதொடர்பாகவும், மாநில கல்வி கொள்கை குறித்து விவாதிக்கவும் துணைவேந்தர்கள், மண்டல இணை இயக்குனர்கள், கல்லூரி முதல்வர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

கவர்னர் துணைவேந்தர்கள் மாநாட்டை 5-ந்தேதி நடத்துகிறார். அதில் கலந்துகொள்வது என்பது துணைவேந்தர்களுடைய தனிப்பட்ட விருப்பம். மாநிலங்கள் மாநில கல்விக்கொள்கையை வகுப்பதற்கு முன்னுரிமை உண்டு. தமிழ்நாட்டை போல, கர்நாடகாவிலும் மாநில கல்வி கொள்கை வகுக்கப்பட உள்ளது. இதில் கவர்னர்கள் கட்டுப்பாட்டோடு இருப்பது நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News