நாமக்கல் மாவட்டத்தில் 147.8 மில்லி மீட்டர் மழை கொட்டியது
- நாமக்கல் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
- கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
நாமக்கல் நகரில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை நீடித்தது.
கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதியில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
இதேபோல் ராசிபுரம், புதுச்சத்திரம், மங்களபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 7 மணிக்கு ஆரம்பித்த மழை 1 மணி நேரம் விடாமல் கொட்டியது. இதனால் சாலைகளில் பெருமளவு வெள்ளம் தேங்கி நின்றது. இதில் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
சேந்தமங்கலம் கொல்லிமலை பகுதிகளில் மாலை 5 மணிக்கு தொடங்கிய மழை இரவு 7 மணி வரை நீடித்தது. பின்னர் மீண்டும் இரவு 9 மணிக்கு ஆரம்பித்து 10 மணி வரை பெய்தது. இதனால் இரவு முழுவதும் இந்த பகுதியில் குளிர் நிலவியது.
மழையளவு
மாவட்டத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
எருமப்பட்டி-3, குமாரபாளையம்-1.6, மங்களபுரம்-22.4, நாமக்கல்-13.5, கலெக்டர் அலுவலகம்-15, பரமத்திவேலூர்-1, புதுச்சத்திரம்-23, ராசி புரம்-36, சேந்த மங்கலம்-14, திருச்செங்கோடு-2, கொல்லிமலை-16 என மாவட்டத்தில் நேற்று 147.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.