உள்ளூர் செய்திகள்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

Published On 2024-06-24 06:04 GMT   |   Update On 2024-06-24 06:04 GMT
  • புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
  • 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

திருப்பூர்:

திருப்பூர் பாராபாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி புஷ்பலதா (வயது 50). தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 21-ந் தேதி இரவு வேலைக்கு சென்று திரும்பும் போது மங்கலம் சாலையில் பாரப்பாளையம் சந்திப்பில் நிகழ்ந்த விபத்தில் புஷ்பலதா காயமடைந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற அவர் உடனடியாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் புஷ்பலதா மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புஷ்பலதாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்தனர்.

அதன் அடிப்படையில் 2 சிறுநீரகங்கள் தானமாக பெறப்பட்டது. பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு 2 சிறுநீரகங்கள் அகற்றப்பட்டது. அதில் ஒன்று கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கும் , மற்றொன்று சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மூலம் 2 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.

உறுப்புகளை தானம் செய்த புஷ்பலதாவின் உடலுக்கு திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் முதல்வர் முருகேசன் மற்றும் உயரதிகாரிகள் மரியாதை செலுத்தி அனுப்பி வைத்தனர். அரசு சார்பில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் மரியாதை செலுத்தினர். மேலும் பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News