அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள்
- அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெறுகிறது.
- 20-ந்தேதி வட்டார அளவில் நடக்கிறது
பெரம்பலூர்:
சென்னை ஒலிம்பியாட்டை முன்னிட்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. வட்டார அளவிலான போட்டிகள் 20-ந்தேதி நடக்கிறது.
சென்னை மாமல்லபுரத்தில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டிகள் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, அரசு மற்றும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கூடலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த செஸ் போட்டியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவில் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது.
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கும், 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு பள்ளி அளவிலும் செஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 20-ந்தேதி வட்டார அளவில் செஸ் போட்டிகள் நடைபெறவுள்ளது.
பெரம்பலூர் வட்டாரத்திற்கு குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், குன்னம் வட்டாரத்திற்கு குன்னம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும் வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
வட்டார அளவில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 25-ந்தேதி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்படுகிறது. 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவில் நடைபெறும் செஸ் போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் மாநில அளவில் நடைபெறும் பயிற்சி முகாம், போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மேலும் அவர்கள் சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வீரர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பை பெறுவார்கள். 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு நடத்தப்படும் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிப்பவர்கள் ஒலிம்பியாட் செஸ் போட்டிகளை பார்வையிடும் வாய்ப்பை பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.