புகளூர் சர்க்கரை ஆலையில் விஷ வாயு கசிவு- 2 தொழிலாளர்கள் மயக்கம்
- சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
- விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர்:
கரூர் மாவட்டம் புகளூரில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் கரும்புகள் இந்த ஆலையில் அரவைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது
இந்நிலையில் இந்த சர்க்கரை ஆலையில் பாகு காய்ச்சி அதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குழாய்கள் மூலம் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது தற்போது பொங்கல் விடுமுறை தினத்தை ஒட்டி தொழிலாளர்கள் யாரும் பணிக்கு வரவில்லை.
இன்று மீண்டும் சர்க்கரை ஆலையில் அரவைப் பணிகளை தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஒரு வாரமாக தேங்கி கிடந்த சர்க்கரை ஆலை பாகு கழிவுகளை அகற்றும் பணியில் இரண்டு தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர்.
ஒரு வாரமாக தேங்கியிருந்த கழிவுகளில் இருந்து திடீரென்று வாயு கசிவு ஏற்பட்டது. இதையடுத்து பணியில் இருந்த இரண்டு தொழிலாளர்களும் திடீரென மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வேலாயுதம் வேலாயுதம் பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.