சைக்கிளில் ரோந்து செல்லும் போலீசார்: தனியாக செல்லும் பெண்களுக்கு துணையாக செல்கிறார்கள்
- போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:
ஆவடி மாநகர காவல் ஆணையரகத்துக்குட்பட்ட பகுதிகளில் செயின் பறிப்பு மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருப்பதற்காகவும் அக்கம், பக்கம் கண்காணிப்பு திட்டம் என்ற புதிய திட்டத்தை ஆவடி சரக போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தொடங்கி வைத்தார்.
இதற்காக போலீசார் இரவு நேரத்தில் குடியிருப்பு மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் சைக்கிளில் சென்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பாதுகாப்பு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து சைக்கிளில் சென்று கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதுபோல இரவு நேரத்தில் பணி முடிந்து வீடு திரும்பி வருவோர், வெளியூரில் இருந்து வீடு திரும்புவோர்களிடம் சென்று செயின் பறிப்பு திருடர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பாதுகாப்பாக செல்ல வலியுறுத்தி வீடுவரை சென்று விட்டு வருகிறார்கள். மேலும் சோதனை சாவடிகளில் நின்றபடி வாகன சோதனை நடத்தி எரிசாராயம், போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆவடி உதவி கமிஷனர் புருசோத்தமன் இன்ஸ்பெக்டர்கள் டில்லிபாபு அருணாச்சல ராஜா மற்றும் போலீசார் இந்த பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.