உள்ளூர் செய்திகள்

100 மோட்டார் சைக்கிள்களில் விதிமுறை மீறிய நம்பர் பிளேட்டுகள் அகற்றம்- போலீசார் அதிரடி

Published On 2023-01-25 11:03 GMT   |   Update On 2023-01-25 11:51 GMT
  • விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர்.
  • இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

ஆலந்தூர்:

மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி பதிவு எண்ணை பொருத்தி உள்ளனர்.

பார்ப்பதற்கு எளிதில் தெரியாத அளவிற்கு மாடலாகவும், கலர்கலராகவும் வைத்து இருக்கிறார்கள். விதிமுறைப்படி வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் பொருத்த வேண்டும் என்று போலீசார் எச்சரித்தும் பலர் கண்டு கொள்வதில்லை.

இந்நிலையில் மடிப்பாக்கம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தில்லை கங்கா நகர் மெயின் ரோடு, ஆதம்பாக்கம் ஏரி பாலம் அருகே இன்று காலை மடிப்பாக்கம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விதிமுறை மீறி நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் மடக்கி பிடித்தனர். வாகனங்களில் இருந்த விதவிதமான நம்பர் பிளேட்டுகளை அதிரடியாக அகற்றினர். மேலும் அங்கேயே அந்த மோட்டார் சைக்கிள்களுக்கு விதிமுறைபடி உள்ள புதிய நம்பர் பிளேட் மாற்றப்பட்டது.

சுமார் 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இதில் சிக்கியது. கார்களும் தப்பவில்லை. விதிமுறை மீறி நம்பர் பிளேட் உள்ள வாகனங்களுக்கு இன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்து போலீசார் அபராதம் விதிக்கவில்லை.

வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினர். இனிவரும் நாட்களில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இன்று காலை நடந்த இந்த அதிரடி சோதனையில் 10-க்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சிக்கிய வாகனங்கள் சாலை யோரத்தில் வரிசையாக நிறுத்தப்பட்டு இருந்ததால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

புளியந்தோப்பு போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வாகனம் ஓட்டி வரும் வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து அறிவுரை வழங்கினர். மேலும் வாகன ஓட்டிகள் விரும்பினால் உடனடியாக நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பி வைத்தனர்.

இந்த வாகன சோதனையில் இன்ஸ்பெக்டர் செல்லதுரை, சப்-இன்ஸ்பெக்டர் முனிவேல், ரேகா, சையத் அமின், தலைமை காவலர்கள் பாஸ்கர், சுரேஷ்பாபு, பிரேம்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News