உள்ளூர் செய்திகள்

திருத்தப்பட்ட பட்டியல் வெளியானது- நிலக்கரி எடுப்பதற்கான ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் 3 பகுதிகள் நீக்கம்

Published On 2023-05-11 05:37 GMT   |   Update On 2023-05-11 06:20 GMT
  • தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவிப்பு வெளியிட்டார்.
  • நிலக்கரி எடுப்பதற்கான ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் 3 பகுதிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது.

சென்னை:

நிலக்கரி அமைச்சகம் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி நாடு முழுவதும் 101 இடங்களில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் தமிழகத்தை சேர்ந்த 3 பகுதிகள் இடம் பெற்றிருந்தன.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள மைக்கேல்பட்டி, கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டத்தில் உள்ள சேத்தியாதோப்பு கிழக்கு பகுதி, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டத்தில் உள்ள வடசேரி ஆகிய 3 பகுதிகளும் இடம் பெற்றிருந்தன. இந்த 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகள் ஆகும்.

டெல்டா பகுதிகளில் நிலக்கரி எடுக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து தமிழக டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி அறிவிப்பு வெளியிட்டார்.

தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஏல பட்டியலில் இருந்து தமிழக பகுதிகள் நீக்கப்படுவதாக அவர் கூறினார்.

இந்த நிலையில் நிலக்கரி எடுப்பதற்கான ஏல பட்டியலில் இருந்து தமிழகத்தின் 3 பகுதிகளை மத்திய அரசு நீக்கி உள்ளது. திருத்தப்பட்ட நிலக்கரி ஏல பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள வடசேரி, சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி ஆகிய 3 பகுதிகளும் நீக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News