உள்ளூர் செய்திகள்

சென்னையில் ரூ.1000 கோடியில் நவீன தகவல் தொடர்பு வளாகம்: 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு

Published On 2024-07-03 04:45 GMT   |   Update On 2024-07-03 04:45 GMT
  • கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக தகவல்.
  • தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை தற்போது பெங்களூருக்கு இணையாக தகவல் தொழில் நுட்பத் துறையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஸ்டார்ட்அப் முதல் ஐ.டி. சேவைத் துறை வரையில் தொடர்ந்து முதலீடுகளை பெற்று வருகிறது.

இதன் வாயிலாக நாட்டின் மொத்த மென்பொருள் ஏற்றுமதியிலும், மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளிலும் தமிழ்நாட்டின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபலமான ஐ.டி. சேவை மற்றும் கன்சல்டிங் சேவை நிறுவனமான கேப்ஜெமினி, சென்னையில் புதிய கேம்பஸ் அமைக்க உள்ளதாக நேற்று (செவ்வாய்க் கிழமை) அறிவித்துள்ளது.

டெக் நிறுவனங்களின் முதலீடுகள் சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், கேப் ஜெமினி அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த முதலீட்டின் வாயிலாக கேம்ஜெமினி சுமார் 6 லட்ச சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட உள்ள இந்த புதிய தகவல் தொழில் நுட்ப வளாகத்தில், 5000 ஊழியர்கள் பணிபுரியும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

2027-ம் ஆண்டுக்குள் இந்த கேம்பஸ் கட்டி முடிக்கப்படும் என்று கேப்ஜெமினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், கேம்ஜெமினி தற்போது அறிவிக்கப்பட்ட முதலீட்டில் சுமார் ரூ.3 கோடியை அருகில் உள்ள அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக ஒதுக்குவதாகவும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இந்த புதிய , ஐடி வளாகத்தில் நவீன கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் இருக்கும் என்று கேப் ஜெமினி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த கேம்பஸ்-ல் பைனான்சியல் சர்வீசஸ், என்ஜினீயரிங், டிஜிட்டல், கிளவுட், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்கள் பணிபுரிய இது உதவும்.

மேலும், இந்த வளாகத்தில் மேம்படுத்தப்பட்ட என்ஜினீயரிங் லேப்ஸ், வாடிக்கையாளர் சேவை மையங்கள் என தனித்தனி பகுதிகள் இருக்கும் என கேப்ஜெமினி தெரிவித்துள்ளது.

சென்னையில் மிகப்பெரிய ஐ.டி. கேம்பஸ் என்றால் டி.சி.எஸ். நிறுவனத்தின் சிறுசேரி கேம்பஸ் தான். இதை முறியடிக்கும் வகையில் பல நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் பிரான்சின் கேப்ஜெமினி நிறுவனம் அடுத்த 3 வருடத்தில் சென்னையில் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் இன்னோ வேஷன் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு நாங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த முதலீடு காட்டுகிறது என்று கேப்ஜெமினி நிறு வனத்தின் ஆசியா பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் கார்ப்பரேட் ரியல் எஸ்டேட் சேவைகளின் தலைவர் விஜய் சந்திர மோகன் கூறி உள்ளார்.

கேப்ஜெமினியின் இந்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்ப வளாகம், தமிழ்நாட்டில் இருக்கும் திறன்மிக்க டெக் ஊழியர்களை பயன்படுத்திக் கொள்ள ஆர்வம்காட்டு வதை பிரதிபலிக்கிறது, மேலும் 2030-ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் தமிழ்நாடு அரசின் இலக்கிற்குக் கூடுதல் பலம் கிடைத்துள்ளது என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.

Tags:    

Similar News