ராயபுரத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 3 வீடுகள்-9 கடைகளுக்கு சீல்: ரூ.1½ கோடி சொத்துக்கள் மீட்பு
- சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேண்டு மென்று கூடுதல் நகர உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது.
- ரூ.1½ கோடி சொத்துக்களை மீட்டு அங்கு குடியிருந்தவர்களையும் பொருட்களையும் ராயபுரம் போலீசாரின் உதவியோடு வெளியேற்றினர்.
ராயபுரம்:
ராயபுரம் கல்மண்டபம் பகுதியில் இந்து அறநிலையதுறைக்கு சொந்தமான அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்து உள்ளது.
இந்த கோவிலுக்கு சொந்தமான 1200 சதுர அடி பரப்பளவு உள்ள இடத்தை தனியார் நபர் ஆக்கிரமித்து முதல் தளத்தோடு 9 கடைகள் மற்றும் 3 வீடுகள் இருந்தன.
இதில் நீண்ட காலமாக அங்கு வசித்து வரும் சங்கர் என்பவர் பராமரிப்பில் அற நிலையத்துறை ஒப்படைத்த தாகவும் கீழ்தளத்தில் உள்ள கடைகளுக்கு வரும் வாடகை மட்டும் அவர் எடுத்து கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தரை தளம் மட்டும் அல்லாமல் மேல் தளத்திலும் சங்கர் வசிக்கும் 3 வீடுகள் உட்பட 9 கடைகளையும் அதற்கான வாடகையையும் 25 ஆண்டுகளுக்கு மேலாக சொந்தமாக குத்தகைக்கு விட்டு சங்கர் அனுபவித்து வந்த நிலையில் கடந்த 1-ந் தேதி அன்று இந்த சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அறநிலைய துறையிடம் ஒப்படைக்க வேண்டு மென்று கூடுதல் நகர உரிமையியல் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி நேற்று அற நிலைய துறை அதிகாரிகள் ரூ.1½ கோடி சொத்துக்களை மீட்டு அங்கு குடியிருந்தவர்களையும் பொருட்களையும் ராயபுரம் போலீசாரின் உதவியோடு வெளியேற்றினர். தொடர்ந்து வீடு, கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.