உள்ளூர் செய்திகள்
null

2 கிராமங்களில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

Published On 2024-04-20 09:18 GMT   |   Update On 2024-04-20 09:43 GMT
  • வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.
  • கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

ராயக்கோட்டை:

கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதி வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட அக்ரஹார ஊராட்சியில் உள்ள கடவரஅள்ளி கிராமத்தில் நேற்று காலை வாக்கு பதிவுக்கான பணிகள் நடைபெற்று தயார் நிலையில் இருந்தன.

ஆனால், கடவரஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் ஒருவர் கூட காலை 10 மணி நிலவரப்படி வாக்களிக்க வரவில்லை.

இதுகுறித்து அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறும்போது, இந்த பகுதியில் 450 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் இந்த பகுதியில் வீட்டுமனை பட்டா கேட்டு பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு அளித்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட தேர்தல் நடத்தும் உதவி அலுவலர், போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கடவரஅள்ளி கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தை மாலை 5 மணி வரை நடைபெற்றது. இதில் தங்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பிறகு அப்பகுதி பொதுமக்கள் சமாதானம் அடைந்து 5.20 மணி முதல் வாக்கு பதிவு செய்ய தொடங்கினர். 6 மணிக்கு பிறகு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் இரவு 9 மணி வரை வாக்குபதிவு நடைபெற்றது.

கடவரஅள்ளி பகுதியில் மொத்தம் 455 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 377 பேர் மட்டும் வாக்களித்தனர். அந்த பகுதியில் மொத்தம் 76 சதவீதம் வாக்கு பதிவாகி இருந்தது.

இதேபோன்று தேன்கனிக்கோட்டை அருகே காரண்டஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட கச்சுவாடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் வாக்காளர் ஒருவர் கூட காலை 7 மணி முதல் 10 மணி வரை வாக்களிக்க வரவில்லை.

கச்சுவாடி பகுதியில் சாலை வசதி கோரி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பதாக தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் சமரசம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மதியம் 1 மணிக்கும் மேல் வாக்களிக்க சென்றனர். 6 மணிக்கு மேல் வாக்களிக்க வந்தவர்களுக்கு அதிகாரிகள் டோக்கன் விநியோகம் செய்தனர். அதன்பிறகு டோக்கன் விநியோகம் செய்யப்பட்டவர்கள் இரவு 9 மணி வரை வாக்களித்தனர். இதில் 60 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

இதேபோல் வேப்பனஅள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மற்றொரு கிராமமான கருக்கனஅள்ளி கிராமத்திலும் தேர்தலை புறக்கணித்து வாக்காளர் யாரும் வாக்களிக்கவில்லை.

மேலும், அந்த பகுதியில் 1050 பேர் வாக்காளர்கள் உள்ளனர். இந்த பகுதியில் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால், பொதுமக்கள் சாலையை கடக்கும் விதமாக மேம்பாலம் அமைக்கவில்லை. இதனால் பொது மக்கள் 4 வழிசாலை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து ஒருவர் கூட வாக்களிக்கவில்லை.

அப்பகுதி பொது மக்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தியும் அவர்கள் யாரும் சமாதானம் ஆகவில்லை. இதன் காரணமாக கருக்கனஅள்ளி கிராமத்தில் ஒரு சதவீதம் வாக்குகூட பதிவாகவில்லை.

Tags:    

Similar News