உள்ளூர் செய்திகள்

கரை ஒதுங்கிய மீன்களை மீனவர்கள் தூண்டில் போட்டு பிடித்ததை படத்தில் காணலாம்.


கன்னியாகுமரி கடற்கரையில் ஒதுங்கிய மீன்களை தூண்டில் போட்டு பிடித்த மீனவர்கள்

Published On 2022-10-21 12:58 IST   |   Update On 2022-10-21 12:58:00 IST
  • கன்னியாகுமரியில் கடல் திடீர் என்று 100 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்பட்டது.
  • கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.

கன்னியாகுமரி:

அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் அமாவாசைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில் நேற்று இரவு கன்னியாகுமரியில் கடல் "திடீர்" என்று 100 அடி தூரத்துக்கு உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன. இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.

ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரைபகுதியில் கடல் உள்வாங்கி இருந்தால் ஏராளமான மீன்கள் உயிருடன் கரைக்கு ஒதுங்கி வந்தன. இதனை மீனவர்கள் தூண்டில் போட்டு பிடித்து சென்றனர்.

கடல் உள்வாங்கியதால் பாறைகளுக்கு இடையே உயிருடன் போராடிக் கொண்டிருந்த மீன்களை மீனவர்கள் தூண்டில் போட்டு பிடித்ததை சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று வேடிக்கை பார்த்தனர்.கன்னியா குமரியில் வங்க கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் கடல் உள்வாங்கி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்து ஆனந்த குளியல் போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

Similar News