உள்ளூர் செய்திகள்

சிறை தண்டனை அளிக்கப்பட்ட முன்னாள் டி.ஜி.பி.க்கு ஜாமின்- 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய அனுமதி

Published On 2023-06-16 08:33 GMT   |   Update On 2023-06-16 09:53 GMT
  • முன்னாள் டி.ஜி.பி.க்கு விழுப்புரம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
  • 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

விழுப்புரம்:

பெண் போலீஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விழுப்புரம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி முன்னாள் டி.ஜி.பி., ராஜேஷ்தாசுக்கு ஐ.பி.சி. 354 (எ) பிரிவின் கீழ் பாலியல் தொந்தரவு கொடுத்தற்காக 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தமிழ்நாடு பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மற்றுமொரு 3 ஆண்டுகள் சிறையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், ஐ.பி.சி. 341 பிரிவின் கீழ் பெண்களை சீண்டியதற்காக ரூ.500 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனை ஏக காலத்தில் கடுங்காவல் சிறை தண்டனையாக அனுபவிக்கவும் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அபராதமாக மொத்தம் ரூ.20 ஆயிரத்து 500 விதிக்கப்பட்டது.

இவ்வழக்கில் முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாசுக்கு உடந்தையாக இருந்த முன்னாள் துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணணுக்கு ரூ.500 மட்டும் அபராதம் விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது. இவருக்கு சிறை தண்டனை ஏதும் விதிக்கப்படவில்லை. மேலும், இவ்விருவர் மீதும் தொடரப்பட்ட ஐ.பி.சி. 506 பிரிவின் கீழ் மிரட்டிய வழக்கு தள்ளுபடி செய்து நீதிபதி புஷ்பராணி தீர்ப்பளித்தார்.

கோர்ட்டில் 7 ஆண்டிற்குள் சிறை தண்டனை வழங்கப்பட்டவர்கள் உடனடியாக ஜாமின் மனு செய்து மேல் முறையீடு செய்ய சட்ட விதிகள் உள்ளது. இதையடுத்து முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ்தாஸ் வக்கீல்கள் விழுப்புரம் கோர்ட்டில் ஜாமின் மனுவை உடனடியாக தாக்கல் செய்தனர்.

இதன் மீதான விசாரணையில் முன்னாள் டி.ஜி.பி.க்கு விழுப்புரம் கோர்ட்டு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும், 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

Tags:    

Similar News