தனியார் பள்ளி பஸ்சில் ஆசிட் வாங்கி வைத்த கிளினர் மீது வழக்கு
- பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது.
- கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னசேலம்:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் இயங்கிவரும் தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ், விஜயபுரத்தில் இருந்து மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை புறப்பட்டது. பஸ்சினை ஈரியூரை சேர்ந்த கோவிந்தன் (வயது 47) ஓட்டி வந்தார். அந்த பஸ்சில் பள்ளியின் பாத்ரூமை கழுவ 2 லிட்டர் ஆசிட் வாங்கி வைக்கப்பட்டிருந்தது.
பஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஆசிட் பாட்டில் சாய்ந்து விழுந்து, ஆசிட் கொட்டியது. இதனால் பஸ் முழுவதும் கடும் நெடியுடன் துர்நாற்றம் வீசியது. இதில் மாணவர்களுக்கு மூச்சுதிணறல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பஸ்சினை நிறுத்திய டிரைவர், மாணவர்களை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார். தொடர்ந்து கிளினர் அம்ம களத்தூர் ராஜவேல் (36) உதவியுடன் ஆசிட் மீது நீரை ஊற்றி சுத்தம் செய்தார்.
தொடர்ந்து பஸ்சினை இயக்கிய டிரைவர், மாணவர்களை பள்ளியில் இறக்கிவிட்டார். வகுப்பறைக்கு சென்ற ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர். சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பள்ளி நிர்வாகம், பாதிக்கப்பட்ட 22 மாணவர்களையும் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளித்து நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பள்ளி பஸ்சின் டிரைவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் கிளினர் ராஜவேல் மீது வழக்குப் பதிவு செய்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சின்னசேலத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளி பஸ் கவிழந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கதாகும்.