உள்ளூர் செய்திகள்

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்- கலெக்டர் ஆய்வு

Published On 2022-10-02 13:36 IST   |   Update On 2022-10-02 13:36:00 IST
  • திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக ஆரணி ஆறு விளங்குகிறது.
  • ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பொன்னேரி:

திருவள்ளூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக ஆரணி ஆறு விளங்குகிறது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து தொடங்கி தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை பெரியபாளையம் ஆரணி பொன்னேரி லட்சுமிபுரம் அணைக்கட்டை அடைந்து பழவேற்காடு கடலில் சென்று அடைகின்றது.

இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் 7 டி.எம்.சி முதல் 15 டி.எம்.சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கின்றன இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் 17 ஆயிரம் கன அடி நீர் ஆரணி ஆற்றில் வெளியேறியது. இதனால் சோமஞ்சேரி ஏ.ரெட்டிபாளையம், மனோபுரம், பிரளம்பாக்கம் வஞ்சிவாக்கம் ஆண்டார்மடம், பெரும்பேடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் ஆற்றின் கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகுந்தது.

இதைத்தொடர்ந்து ஆரணி ஆற்றின் கரைகளை பலப்படுத்த உத்தரவிடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற பருவமழைக்கு முன்பு கரைகளைப் பலப்படுத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஆரணி ஆற்றில் கரைகளை பலப்படுத்தும் பணியை மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஏ.ரெட்டிபாளையம் பகுதியில் கரைகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் காட்டூர் தத்தை மஞ்சி ஏரிகளை இணைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஆர்.டி.ஓ. காயத்ரி, தாசில்தார் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் வெற்றிவேலன், இளநிலை பொறியாளர் பாலு, உதவி பொறியாளர் சரவணன் ஏ. ரெட்டிபாளையம் ஊராட்சித் தலைவர் கவிதா மனோகரன் உடன் இருந்தனர்.

Similar News