தருமபுரி மாவட்டத்தில் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர்.
- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.
தருமபுரி:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தி.மு.க. தொழிற்சங்கத்தினரை வைத்து, அரசு தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்தை நிறுத்தாமல், பஸ்களை இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் தருமபுரி நகர போக்குவரத்து பணிமனை அருகே அ.தி.மு.க, கம்யூனிஸ்ட், பா.ம.க. உள்ளிட்ட தொழிற் சங்கத்தினர் ஊர்வலமாக பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை வரை நடந்து சென்றனர்.
அப்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தர வேண்டும்.
தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்து உடனடியாக பேச வேண்டும் என முழக்கங்களை எழுப்பி வந்தனர். இதனை தொடர்ந்து பாரதிபுரம் போக்குவரத்து பணிமனை அருகில் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க, தொ.மு.ச.வை சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதேபோன்று பென்னாகரம் போக்குவரத்து பணிமனை முன்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்தினர் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் தொழிற்சங்க போராட்டத்தில் தி.மு.க. தொழிற் சங்கத்தை தவிர மற்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில், தருமபுரியில் நடைபெற்ற போராட்டத்தில் தி.மு.க தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களும் கையில் தொழிற்சங்க அடையாள அட்டையை வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.