திருப்பூரில் களை கட்டிய சமத்துவ பொங்கல் விழா
- நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.
- பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பாக திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட வளர்மதி பாலம் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையோரம் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது. 3 நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதல் 2 நாட்கள் மாலை நேரத்தில் பல்வேறு தமிழ் பாரம்பரிய கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .
அதனை தொடர்ந்து 3-வது நாளான இன்று திருப்பூர் நொய்யல் ஆற்றங்கரையோரம் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளை சேர்ந்த 1000 பெண்கள் கலந்து கொண்டு வைக்கக்கூடிய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டனர். நொய்யல் நதிக்கரை யோரம் அடுப்புகளை பற்ற வைத்து பொங்கலிட்டனர். பால் பொங்கும் போது குலவையிட்டனர்.
இதைத்தொடர்ந்து மகிழ்ச்சியான ஞாயிறு கொண்டாட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பரதநாட்டியம், சிலம்பம், பானை உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல் போன்ற நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான பாரம்பரிய விளையாட்டுக்களான நொண்டி, பல்லாங்குழி, தாயம், பரமபதம் போன்ற விளையாட்டுகளும் நடைபெற்றது.
மேலும் கேரம், செஸ், கைகளில் மெகந்தி வரைதல் , சலங்கையாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாநகரை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் என பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் நொய்யல் பகுதியானது பொதுமக்களின் ஆட்டம் பாட்டத்தால் களை கட்டியது. சமத்துவ பொங்கல் தொடக்க விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார், மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உள்ளிட்டோர் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கலந்து கொண்டு பொங்கல் விழாவினை தொடங்கி வைத்தனர்.