தருமபுரியில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு- வாகன ஓட்டிகள் அவதி
- லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி பயணித்தனர்.
- இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் பல இடங்களில் பனிமூட்டம் விலகுவதற்காக காத்து நின்றனர்.
தருமபுரி:
தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சாக்கடை கழிவுநீருடன் கலந்து புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகினர்.
இந்நிலையில் தருமபுரியில் மழை சற்றே குறைந்துள்ளது. ஆனால் இன்று அதிகாலை திடீரென கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. தருமபுரி நகரம், நல்லம்பள்ளி, தொப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் பனி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர்.
லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி பயணித்தனர். இருசக்கர வாகனங்களில் சென்றவர்களும் பல இடங்களில் பனிமூட்டம் விலகுவதற்காக காத்து நின்றனர்.
ஏற்கனவே சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் தேங்கியுள்ள மழைநீர் ஒருபுறம், பனியின் தாக்கம் மறுபுறம் என்று போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரமாக நிறுத்தினர். பின்னர் பனிப்பொழிவு குறைந்த பிறகு வாகனங்களை மெதுவாக இயக்கினர்.
காலை 8 மணிக்கு பிறகே பனியின் தாக்கம் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்கியது. இந்த பனிமூட்டம் எதிரொலியாக அதிகாலை முதலே குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.