தமிழ்நாடு

எடப்பாடி பழனிசாமி மனுவை ஏற்கக் கூடாது- சிறப்பு கோர்ட்டில் தயாநிதி மாறன் மனுதாக்கல்

Published On 2024-11-05 09:42 GMT   |   Update On 2024-11-05 09:42 GMT
  • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.
  • வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலின் போது, மத்திய சென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து பிரசாரம் செய்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய சென்னை எம்.பி.யாக இருந்த தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என குற்றம் சாட்டினார்.

இந்த பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என ஆட்சேபம் தெரிவித்து, தயாநிதி மாறன் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நகரிக் சுரக் ஷா சன்ஹிதா எனும் பி.என்.எஸ்.எஸ். அமலுக்கு வரும் முன்பே இந்த அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதனால், அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பி.என்.எஸ்.எஸ். சட்டத்தின் கீழ் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

குற்றச்சாட்டுகள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வாசித்து காட்டப்பட்டு விட்டதால், வழக்கில் இருந்து விடுவிக்க கோர முடியாது என்று கூறியுள்ளார். இதையடுத்து, வழக்கு விசாரணையை டிசம்பர் 2-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி ஜி.ஜெயவேல் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News