கரூரில் செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் மீண்டும் வருமானவரி சோதனை
- செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
- கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
தமிழக அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி. இவரது தம்பி அசோக்குமார் உள்பட அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடு என இவருக்கு தொடர்புடையதாக கருதப்பட்ட சென்னை, கரூர், கோவை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்டவர் வீடு, அலுவலகங்களில் கடந்த மே மாதம் 26-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் அப்போது சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறையினரை தி.மு.க.வினர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் துணை ராணுவ படை போலீஸ் பாதுகாப்புடன் அசோக்குமார் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவரது நண்பர்கள் சங்கர், கொங்கு மெஸ் மணி ஆகியோரது வீடு அலுவலகங்களில் சோதனை நடந்தது. இதனை தொடர்ந்து 2-வது முறையாக நடந்த சோதனை 8 நாட்கள் நீடித்தது. இதில் பல ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி அந்த வீடுகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு சீல் வைத்தனர்.
அதன் பின்னர் கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அடையாறு பசுமை வழிச்சாலையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரது சகோதரர் தங்கியிருந்த வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர்.
அப்போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கிடையே அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியை கைது செய்த காரணத்தால் அவர் வகித்து வந்த மின்சார துறை மற்றும் ஆயர் தீர்வை துறை வேறு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில் 3-வது முறையாக தற்போது வருமான வரித்துறையினர் கரூரில் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். முன்னதாக கரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த வருமான வரித்துறையினர் இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராக உள்ள ராயனூர் பகுதியில் உள்ள கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் 20க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் ஈடுபட்டு உள்ளனர். கொங்கு மெஸ் மணி வீட்டில் மட்டும் 2 காரில் வந்த 6 அதிகாரிகள் காலை 8.30 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் வீட்டில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதை உடனடியாக உறுதிபடுத்த இயலவில்லை.
இந்த சோதனையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 8 நாட்கள் கொங்கு மெஸ் மணி வீட்டில் சோதனை நடைபெற்றுள்ள நிலையில் மீண்டும் அவரது வீட்டை குறிவைத்து வருமானவரிதுறை சோதனை தொடங்கியுள்ளது கரூரில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.