ஆகஸ்டு 13-ந்தேதி முதல் 3 நாட்கள் மூவர்ண தேசிய கொடியை வீடுகளில் ஏற்ற வேண்டும்- தமிழக மக்களுக்கு எல்.முருகன் வேண்டுகோள்
- சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது.
- தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
சென்னை:
மத்திய மந்திரி எல்.முருகன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
44-வது சர்வதேச 'செஸ் ஒலிம்பியாட்' போட்டியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் முதல் காய் நகர்த்தும் நிகழ்வை நேற்று மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
செஸ் தோன்றிய தமிழ் மண்ணில் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவது தமிழர்களுக்கு பெருமை.
நேற்று அண்ணா பல்கலைக்கழக 42-வது பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி மாணவர்களுக்கு பட்டம் வழங்கியது அண்ணா பல்கலைக் கழகத்தின் வரலாற்று மைல்கல் ஆகும்.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி கடந்த மே மாதம் 26-ந் தேதி வந்தார். அப்போது ரூ.5000 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வை நடத்த சென்னை வந்தார்.
75-வது சுதந்திர தின விழாவை கொண்டாடும் இந்த தருணத்தில் குக்கிராமத்தில் பிறந்த பழங்குடியின சகோதரி ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ளார். ஆகஸ்டு மாதம் 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை 3 நாட்கள் வீடுகள் தோறும் மூவர்ண தேசிய கொடியை ஏற்றும் இயக்கம் தொடங்க இருக்கிறோம். இந்த மூவர்ண கொடியை தமிழகத்தில் வீடுகள் தோறும் ஏற்றி சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து அவர்களின் மகிமையை இன்றைய சந்ததிகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நாடுமுழுவதும் 24 ஆயிரம் கிராமங்களில் 4 ஜி அலைவரிசையை கொடுக்க இருக்கிறோம். தமிழகத்தில் இணையதள வசதி இல்லாத 534 கிராமங்களுக்கு 4ஜி அலைவரிசை வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்துக்கு ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் 4 ஜி சேவை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எனவே இனி கிராமங்கள் தோறும் இணையதள வசதி கிடைக்க உள்ளது.
சென்னை மாநகராட்சி மூலம் அண்ணாநகரில் சுயநிதி திருவிழா நடக்கிறது. தெருவோர வியாபாரிகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக ரூ.10 ஆயிரம் வழங்கும் சுயநிதி திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இதன் மூலம் தமிழகத்தில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பயன் அடைந்துள்ளனர். தற்போது மேலும் 75 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் 45 ஆயிரம் பேருக்கு இன்று மாலை தலா ரூ.10 ஆயிரம் சுயநிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.