உள்ளூர் செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து பலியானோருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு எப்படி வழங்க முடியும்? அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

Published On 2024-07-06 06:11 GMT   |   Update On 2024-07-06 06:11 GMT
  • இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
  • அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

சென்னை:

கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்கள் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:-

சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். அதனால் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருத முடியாது. அவ்வாறு கருதவும் கூடாது.

தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்குகிறது. ஆனால், கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக தொகை இழப்பீடு வழங்கப்படுகிறது? என்பது குறித்து பொதுமக்களுக்கு அரசு தெளிவுப்படுத்தவில்லை. கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ இல்லை.

அவர்களுக்கு இழப்பீடாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்குவதை ஏற்க முடியாது. இழப்பீடு வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம். இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

பின்னர், இந்த இழப்பீட்டு தொகையை குறைப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய முடியுமா? என்று அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்கும்படி அரசு தரப்பு வக்கீல்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

Similar News