உள்ளூர் செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 55 ஆயிரம் கன அடியாக சரிவு

Published On 2022-09-02 09:30 IST   |   Update On 2022-09-02 09:30:00 IST
  • ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.
  • மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து இன்று காலை வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியானது.

மேட்டூர்:

கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

இதையடுத்து அந்த அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒனேக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

ஒகேனக்கல்லில் நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று மாலை வினாடிக்கு 65 ஆயிரம் கன அடியாக சரிந்தது. ஆனாலும் ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 90 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து இன்று காலை வினாடிக்கு 55 ஆயிரம் கன அடியானது.

அணை முழு கொள்ளளவான 120 அடியாக நீடிப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த சில நாட்களாக அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது.

இதையடுத்து அணையில் இருந்து 55 ஆயிரத்து 400 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 23 ஆயிரம் கன அடி தண்ணீர் நீர்மின் நிலையங்கள் வழியாகவும், 32 ஆயிரம் கனஅடி தண்ணீர் 16 கண் மதகான உபரி நீர் போக்கி வழியாகவும், 400 கன அடி தண்ணீர் கால்வாயிலும் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் காவிரியில் குளிக்கவும், துணி துவைக்கவும் தடை நீடிக்கிறது. வருவாய்த்துறை அதிகாரிகள் காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News