பழனி கோவிலில் மோடி பெயரில் தங்க ரதம் இழுத்த ஓ.பி.எஸ்.
- ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
- குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
பழனி:
பழனி முருகன் கோவிலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் வந்தார். பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார்.
கிரி வீதி வரை நடந்து பின்னர் பேட்டரி கார் மூலம் ரோப்கார் மையம் சென்றார். ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தங்க ரதம் இழுக்க பெயர் பதிவு செய்தார். அதில் வரிசை எண் 102ல் அவரது பெயரிலும், வரிசை எண் 103ல் பிரதமர் நரேந்திர மோடி பெயரிலும் தங்க ரதம் இழுக்க பணம் கட்டினார்.
தங்க ரத நிலை 1-ல் இருந்து 2 வரை அவர் தங்க ரதம் இழுத்து வழிபாடு செய்தார். அதன் பின்பு மூலவர் தண்டாயுதபாணியை மனமுருகி வழிபட்டார். மீண்டும் பாரத பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக இந்த வழிபாட்டில் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அதன் பின்னர் தனது குல தெய்வமான தொட்டிச்சியம்மன் கோவிலிலும் ஓ.பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். முன்னதாக நேற்று காலையில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலிலும், மதியம் மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.