தேர்தல் தோல்வி எதிரொலி: அண்ணாமலைக்கு எதிர்ப்பு வலுக்கிறது
- அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற தலைமையின் ஒரு தலைபட்ச முடிவுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று புகார் தெரிவித்து உள்ளார்கள்.
- கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வருவதால் தலைமையில் மாற்றம் வருமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழகத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. அ.திமு.க.வுடன் கூட்டணி அமைத்து இருந்தால் 10-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்றிருக்க முடியும். இதை அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுகளே உறுதிப்படுத்தியது.
இதனால் இரு கட்சிக்குள்ளும் தொண்டர்கள் ஆதங்கப்படுகிறார்கள். கூட்டணி முறிவுக்கு கட்சி தலைமையை குற்றம் சாட்டுகிறார்கள்.
அண்ணாமலையின் தவறான முடிவுதான் கூட்டணி முறிந்ததற்கு காரணம் என்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார். அதற்கும் உடனடியாக பதிலளித்த அண்ணாமலை "அ.தி.மு.க.வை மக்கள் நிராகரித்து விட்டதாக" கூறினார்.
அடுத்து வரும் தேர்தலிலாவது இந்த கூட்டணி அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கும் நிலையில் அண்ணாமலையின் கருத்து மீண்டும் அ.தி.மு.க.வினரிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் "பா.ஜ.க.வுடன் இனி எப்போதும் கூட்டணி கிடையாது" என்று அதிரடியாக அறிவித்தார்.
தேர்தலில் பா.ஜ.க. 23 இடங்களில் போட்டியிட்டது. அதில் 11 இடங்களில் டெபாசிட்டை பறி கொடுத்தது. நாகையில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதே போல் இந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்த த.மா.கா., ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் 10 இடங்களில் டெபாசிட் வாங்கவில்லை.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்ற தலைமையின் ஒரு தலைபட்ச முடிவுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று புகார் தெரிவித்து உள்ளார்கள்.
பா.ஜ.க. அறிவுசார் அணியின் பொறுப்பாளர் கல்யாணராமன், "அண்ணாமலை கட்சி மேலிடத்தை தவறாக வழி நடத்துகிறார்" என்று குற்றம் சாட்டினார்.
தற்போதும், 2014 தேர்தலில் பா.ஜ.க. 5.56 சதவீத வாக்குகள் பெற்றிருந்த நிலையில் தற்போது தனது தலைமையில் 11.24 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அண்ணாமலை மேலிடத்துக்கு தெரிவித்துள்ளார்.
இதுவே தவறு. 2014 தேர்தலில் பா.ஜ.க. 9 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது. அந்த கணக்குப்படி பார்த்தால் இந்த தேர்தலில் 14.25 சதவீதம் பெற்று இருக்க வேண்டும். ஆனால் 11 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. இப்படி எல்லாமே தவறான வழிகாட்டல்தான்.
ஒரு மனிதர் செய்த தவறுகளுக்கு சிறிதளவேணும் தார்மீக பொறுப்பை ஏற்க வேண்டும். ராஜினாமா செய்யலாம். அல்லது குறைந்தபட்சம் ராஜினாமா செய்யப்போவதாக நாடகமாவது ஆடலாமே என்றார்.
கட்சிக்குள் எதிர்ப்பு வலுத்து வருவதால் தலைமையில் மாற்றம் வருமா? என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.